வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை பெற்ற விவகாரம் தொடர்பில் நடிகை நயன்தாரா, இயக்குநா் விக்னேஷ் சிவன் ஆகியோரை நேரில் அழைத்து விசாரணை நடத்த சுகாதாரத் துறை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அண்மையில் விக்னேஷ் சிவன், தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
வாடகைத் தாய் மூலமே இவர்கள் குழந்தைகளை பெற்றுள்ளதாக வெளியான தகவல்களை தொடர்ந்து அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து விதிமுறைகளை மீறி அவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை பெற்றுள்ளார்களா என்று விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சுகாதாரத் துறையினர் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்ததை தொடர்ந்து நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிகள் சுகாதார துறையினரிடம் சில ஆவணங்களைச் சமா்ப்பித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இருவருக்கும் கடந்த ஜூன் 9 ஆம் திகதி திருமணம் நடைபெற்ற போதும், 2016ஆம் ஆண்டிலேயே இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து 2021 டிசம்பா் மாதம் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு பதிவு செய்ததாகவும் தகவல் வெளியாகிறது. இதற்கான ஆவணங்களை அவா்கள் தரப்பினா் சுகாதாரத் துறை குழுவினரிடம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.