November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகின் உயரமான கட்டடத்தில் ஒளிர்ந்த தமிழர் வரலாறு

உலகின் உயரமான கட்டடமான டுபாயிலுள்ள ‘புர்ஜ் கலீஃபா’ கோபுரத்தில் ஒளிர்ந்த தமிழர் வரலாறு தொடர்பான காட்சிப் படங்களை பார்வையிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், “இந்திய வரலாற்றை தெற்கிலிருந்து எழுதுவோம்” என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

டுபாயில் சர்வதேச தொழில் கண்காட்சி நடந்து வருகிறது. அங்கு இடம் பெற்றுள்ள இந்திய அரங்கு வளாகத்தில் தமிழ்நாட்டு அரங்கமும் உருவாக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அந்த அரங்கை திறந்து வைத்தார்.

அந்த அரங்கில் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா, மருத்துவம், கலைப்பண்பாடு ஆகிய துறைகளின் தொழில்பூங்காக்கள் பற்றிய தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் கண்காட்சி தொடர்பாக நடத்தப்பட்ட நிகழ்வொன்றின் போது, தமிழ் நாட்டு வரலாற்றின் பெருமை வாய்ந்த கீழடி மற்றும் பொருநை ஆற்றங்கரை நாகரிகங்களின் சிறப்பை விளக்கும் காணொளி, உலகின் உயரமான கட்டடமான ‘புர்ஜ் கலீஃபா’ கோபுரத்தில் ஒளிரச் செய்யப்பட்டது.

இதனை அங்கிருந்த அனைவரும் கண்டு வியந்தனர். இதனை பார்வையிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், “இந்திய வரலாற்றை தெற்கிலிருந்து எழுதுவோம்” என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.