Photo: Twitter/AamAadmiParty
இந்தியாவின் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது.
குறித்த மாநிலங்களில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியமைப்பதுடன் மற்றைய 4 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கவுள்ளது.
5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
தேர்தல் முடிவுகளின்படி உத்தரபிரதேசத்தில் ஆரம்பத்தில் ஆட்சியை கைப்பற்றுவதில் பா.ஜ.கவுக்கும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையில் போட்டி நிலவியது. இதில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று 2ஆவது முறையாக ஆட்சியை தொடர்கிறது.
இதேவேளை 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் வலிமையாக இருந்த காங்கிரஸ் கட்சி இந்த தடவை ஆட்சியை பறிகொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
முதலில் காங்கிரசுக்கும், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் அமோக வெற்றி பெற்றுள்ளது.
அத்துடன், 70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்திலும், கோவா மாநிலத்திலும், 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரிலும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது.