
File Photo
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
அவருக்கு பிணை வழங்குவதற்கு மத்திய அரசு தெரிவித்த எதிர்ப்பை உச்ச நீதிமன்றம் நிராகரித்து, பிணை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்தியவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் சிறுநீரகத் தொற்று, மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்ததைத் தொடர்ந்து, அவருக்கு பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்று கடந்த வருடம் மே 28 ஆம் திகதி பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
பரோலில் வந்த பேரறிவாளன் வீட்டிலிருந்தவாறே தனது நோய்களுக்கு சிகிச்சை எடுத்து வந்தார்.
மேலும், மருத்துவ சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று அவர் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் பேரறிவாளனின் உடல்நிலையைக் கருதி அவரின் பரோல் காலப்பகுதி பல தடவைகள் நீடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தான் பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால், தனக்கு பிணை வழங்க வேண்டும் என பேரறிவாளன் கோரியிருந்தார். இதனை கருத்திற்கொண்ட உச்ச நீதிமன்றம் இன்று, பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.