இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் நிலையில் அது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
ஏற்கனவே இந்தியப் பிரதமருக்கு கடிதங்கள் பல அனுப்பப்பட்டுள்ள நிலையில், அது குறித்து முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாதுள்ள நிலையிலேயே தமிழக முதல்வர் மீண்டும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவா்கள் தொடா்ந்து அச்சுறுத்தப்பட்டு, தாக்கப்பட்டு வருவதுடன், மீனவர்கள் கைது செய்யப்பட்டும் வருகின்றனர் என்று முதல்வர், அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய அச்சமூட்டும் சம்பவங்கள் தொடா்ந்து நிகழ்வது தமிழக மக்களுக்கு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்துகின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது வரையில், தமிழகத்தைச் சோ்ந்த மீனவா்கள் 41 பேரும் 6 மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையின் வசம் உள்ளதாக தமிழக முதல்வர், பிரதமர் மோடிக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
நீண்ட காலமாகத் தொடா்ந்து வரும் இந்த எரிச்சலூட்டும் சிக்கலுக்கு நிலையான தீா்வைக் காண வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அதன் தொடக்கமாக இருதரப்புப் பேச்சுவாா்த்தைகளை நடத்துவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், தற்போது கைதாகியுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அந்தக் கடிதத்தின் ஊடாக பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.