January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீனவர்கள் கைது: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்!

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறியதாக தெரிவித்து 29 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் விளக்க மறியலில் வைக்கப்பட்டள்ளனர்.
இந்நிலையிலேயே தமிழக முதல்வர் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

நடப்பவற்றை பார்க்கும் போது, இலங்கையினால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைகள் இதுவரை குறைவதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்று அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படும் எண்ணற்ற நிகழ்வுகளைத் தடுத்திட இந்திய அரசின் உயா்நிலை அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றும் தமிழக முதவர், பிரதமர் மேடியை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, இதுபோன்ற நிகழ்வுகள், சமூக மற்றும் அரசியல் நிலைகளில் மாறுதல்களை ஏற்படுத்தி வருகின்றன எனவும், இந்தப் பிரச்னைக்கு நீண்டகாலத் தீா்வு காண தூதரக முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.