
இந்தியாவின் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்.
92 வயதான லதா மங்கேஷ்கர், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி 10 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.
அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலை சற்று சீரடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எனினும் இன்று காலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதும், சிகிச்சைப் பலனின்றி அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இந்தி, தமிழ் என பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடியுள்ள இவர், இந்தியாவின் தாதாசாகேப் பால்கே விருது மற்றும் பிரான்சின் உயரிய விருது, உள்பட பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார்.