இந்திய குடியரசு தின நிகழ்வில் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்க மறுத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அவர்கள் தமிழக அரசாணையை அவமதித்துள்ளதாகவும் இதனால் அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரால் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நேற்றைய தினம் குடியரசு தின விழாவின் நிறைவாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அங்கிருந்த பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதன்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிர்ப்பு வெளியிட்ட தரப்பினரிடம் பதிலளித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இவ்வாறு நடந்துகொண்டமை, அந்த ஆணையை மீறும் செயல் என பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்து வரும், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.