ஐஸ்வர்யா ரஜினிகாந்துடனான திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ள நிலையில், அதனை தடுத்து இருவரையும் மீண்டும் இணைக்கும் ரஜினியின் சமரசம் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வது தொடர்பில் நடிகர் தனுஷ் நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டார்.
அதில், ”கடந்த 18 ஆண்டுகள் நண்பர்களாகவும், தம்பதியராகவும், பெற்றோர்களாகவும் ஒருவர் மீது ஒருவர் நல்லெண்ணம் கொண்டவர்களாகவும் ஒன்றாக பயணித்தோம். எங்களது வாழ்க்கை பயணம், வளர்ச்சி, புரிந்துகொள்ளுதல், அனுசரித்து செல்லுதல் ஆகியவை நிரம்பியதாக இருந்தது. தற்போது நானும், ஐஸ்வர்யாவும் அவரவர் பாதையில் தனித்தனியாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று ஐஸ்வர்யாவும் பிரிவை உறுதிப்படுத்தி தனியாக டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
தனுஷ் – ஐஸ்வர்யா இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியானதில்லை. அப்படி இருக்கும் போது அவர்கள் திடீரென பிரிவதற்கு காரணம் என்ன? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.
இவர்களின் பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்ற போதும், அது தொடர்பில் தனுஷ் அல்லது ஐஸ்வர்யாவினால் பதிலெதுவும் வழங்கப்படவில்லை.
எனினும் இந்த விடயத்தில் ஐஸ்வர்யாவின் தந்தையான நடிகர் ரஜினிகாந்த, இருவரிடமும் பேசி பிரச்சனையை தீர்க்க முயற்சித்துள்ள போதும், அது தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இருவரும் விவாகரத்தில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் 2004 ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/hAPu2aPp4n
— Dhanush (@dhanushkraja) January 17, 2022