தமிழ்நாடு மதுரை மாவட்டத்தின் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றன.
தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி இன்று அவனியாபுரத்தில் வழக்கமான உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறன.
வாடிவாசல் வழியாக சீறிப் பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து அடக்க முற்பட்ட காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கின்றன.
கொரோனா வழிமுறைகளுக்கு உட்பட்டு 700க்கும் மேற்பட்ட காளைகள் களமிறங்க உள்ளன. 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் மட்டுமே களமிறக்கப்பட்டுள்ளனர். 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் எழுத்தாளர் சு வெங்கடேசன், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் உட்பட பலரும் அவனியாபுர ஜல்லிக்கட்டு தொடக்க விழாவில் பங்கேற்றனர்.