இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, பரோலில் வெளியே வந்தார்.
30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் சிறையில் இருக்கும் நளினி, இன்று காலை சிறைச்சாலையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், இதனால் தனக்கு உதவியாக மகளுக்கு பரோல் வழங்க வேண்டும் என்றும் நளினியின் தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அப்போது தமிழக அரசு சார்பில் நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அவர் வேலூரிலேயே தங்கி இருக்க உத்தரவிடப்பட்டது. காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள வேலு என்பவரது வீட்டில் தங்க நளினி தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.
அந்த வீட்டின் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து பொலிஸார் மற்றும் வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து அனுமதி வழங்கினர்.
இதன்படி இன்று முதல் 30 நாட்கள் நளினிக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வேலூர் பெண்கள் சிறையில் இருந்து நளினி இன்று காலை 10 மணிக்கு பரோலில் வெளியே வந்ததுடன், அவர் பலத்த பாதுகாப்புடன் காட்பாடியில் உள்ள வேலுவின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நளினி பரோலில் இருக்கும் காலப்பகுதியில், அவருக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. மேலும் வெளிநபர்கள், அரசியல் கட்சியினர் அவரை சந்திக்க கூடாது. பத்திரிகை ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது. மருத்துவக் காரணங்களுக்காக மட்டும் வெளியே செல்லலாம். அதற்கும் முன் அனுமதி பெற வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை தினமும் காட்பாடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று நளினி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.