இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதற்காக இலங்கை அரசாங்கத்துடன் பேசி வருவதாக இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவித்து கடந்த சில தினங்களில் இலங்கையின் வடக்குக் கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தார்.
இதனை தொடர்ந்து மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக இலங்கை அரசுடன் இந்தியத் தூதரக உயரதிகாரிகள் பேசி வருவதாக மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, அறிக்கையொன்றைற வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக உயர் அதிகாரிகள், காவலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களைச் சந்தித்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.