தமிழ்நாடு, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புத்தூரில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸான் தொழிற்சாலை விடுதியில், தரமற்ற உணவு கொடுக்கப்பட்டதால், உடல்நிலை பாதிக்கப்பட்ட பல பெண் ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அந்த உணவை சாப்பிட்ட 400 இற்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட 400 இற்கும் மேற்பட்ட பெண்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் பெரும்பாலான ஊழியர்கள் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்களில் சிலர் திரும்பவில்லை என்றும் அவர்கள் குறித்த எந்த தகவல்களையும் விடுதி நிர்வாகம் தெரிவிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் குறித்த பெண்களின் நிலை என்ன ஆனது என தெரியாத காரணத்தால் நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நிர்வாகத்தின் போக்கை கண்டித்தும், உரிய விளக்கம் கேட்டும் சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு (17) முதல் திரண்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
விடிய விடிய இந்தப் போராட்டம் நடைபெற்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாரும் உயிரிழக்கவில்லை எனவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் உறுதியளித்த பின்னரே போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, 115 பேரும் தற்போது நலமுடன் இருப்பதாக கூறப்பட்ட பின்னர் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதேவேளை, விடுதிகளில் இனிமேல் இவ்வாறான தவறுகள் நடைபெறாமல் இருக்க, நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.
அதேபோல், தரமற்ற உணவு வழங்கிய விடுதியின் வார்டன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புத்தூர் சுங்குவார் சத்திரத்தில் இயங்கி வரும் தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.