July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் சொந்த ஊர் திரும்பினர்!

இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஓராண்டு காலமாக டெல்லியில் போராட்டம் நடத்திய வெளி மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர்

ஓராண்டு கடந்த நிலையில் இந்தியாவின் மத்திய அரசு அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்து இருந்தது.

தமது ஒராண்டுகால போராட்டம் வெற்றி பெற்றதை அடுத்து, தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஓராண்டுக்கு பின்னர் தமது கூடாரங்களை காலி செய்துவிட்டு ,சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.

வெற்றி கொண்டாட்டத்துடன் உற்சாகமாக, பேரணியாக விவசாயிகள் ஊர் திரும்புவதை அவதானிக்க முடிகின்றது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இலட்சக்கணக்கான விவசாயிகள் நவம்பர் 26ஆம் திகதி முதல் டெல்லியின் எல்லைப் பகுதிகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதையடுத்து விவசாயிகளுக்கும் அரசு தரப்பினருக்கும் இடையே பல்வேறு கட்ட சமரச பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் எதுவும் பலனளிக்கவில்லை.

இறுதியாக. கடந்த மாதம் 29ஆம் திகதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்தது.

மத்திய அரசு எழுத்து பூர்வமாக உறுதி அளித்ததையடுத்து, போராட்டத்தை திரும்பக் பெறுவதாக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிவித்தது.

இதன்படி, டெல்லியின் சிங்கு, டிக்ரி மற்றும் காஜிபூர் எல்லைகளில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றிய விவசாயிகள், அலங்கரிக்கப்பட்ட டிராக்டர்களில் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.