இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் பயணித்த ராணுவ ஹெலிகொபடர் தமிழகத்தின் குன்னூர் மலைப் பகுதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் இந்த ஹெலிகொப்டர் விபத்து குறித்து பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும் தற்போது இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த நிபுணத்துவம் பெற்ற முக்கிய அதிகாரி ஒருவரை அரசு நியமித்திருக்கிறது.
சகல விதமான ஹெலிகொப்டர்களையும் இயக்குவதில் நிபுணத்துவம் பெற்ற 40 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவமிக்க ஏர் மார்ஷல் மானவேந்திர சிங் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இவர் அனைத்து வகையான ஹெலிகொப்டர்கள் குறித்த நுணுக்கங்களை நன்கு அறிந்தவர் என கூறப்படுகிறது.
இந்திய விமானப்படை பயன்படுத்தும் அனைத்து விதமான ஹெலிகொப்டர்களிலும் 6000 மணி நேரத்துக்கும் மேல் வானில் பறந்துள்ளார் .
ஏர் மார்ஷல் மானவேந்திர சிங்கிடம் விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து கண்டறிய வேண்டிய முக்கிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதிலும் பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கிய நம்பிக்கைக்குரியவராக இருக்கும் ஒருவரிடம் மட்டுமே இவ்வாறான விசாரணைகளை வழங்குவது வழக்கம் .
ஹெலிகொப்டர் பயணித்த பாதையில் மூடுபனி தான் காரணமா? அல்லது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்குமா? அல்லது வேறு ஏதும் காரணம் இருந்திருக்கலாமா என இந்த விசாரணைகளில் அடங்கும் என கூறப்படுகிறது.
ஹெலிகொப்டர் விபத்து நடந்த பகுதி, அதனை பார்த்தவர்கள் ,அது குறித்து பிடிக்கப்பட்ட படங்கள் என சிறு ஆதாரங்கள் கூட முழுவதுமாக விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் முக்கிய தகவல்கள் அரசுக்கு மட்டுமே தெரிவிக்கப்படும் எனவும் அரசு விரும்பி தகவல்களை வெளியிட்டால் மட்டுமே விசாரணை விபரங்கள் வெளியில் வரும் என கூறப்படுகிறது.
தற்போது ஏர் ஆபீசர் கமாண்டிங்-இன்-சீப் பொறுப்பில் விமானப்படையில் பயிற்சிகளுக்கு பொறுப்பாக இருக்கிறார் ஏர் மார்ஷல் மானவேந்திர சிங்.
1982ஆம் வருடத்திலிருந்து இந்திய ஹெலிகொப்டர் விமானியாக ஏர் மார்ஷல் மானவேந்திர சிங் பணிபுரிந்து வருகிறார்.
இவரின் 40 வருட அனுபவத்தில் சியாச்சின் போன்ற கடினமான மலைப்பகுதிகள், ராஜஸ்தான் பாலைவனம், வடகிழக்கு வனங்கள், உத்தராகண்ட் மலைப்பகுதிகள் என மிகவும் கடினமான மலைப்பகுதிகள், எல்லையில் அவசர நேரங்களில் கூட இவர் மிகத் திறமையாக ஹெலிகொப்டர்களை கையாண்ட தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இடம்பெற்ற முப்படை தளபதி பயணித்த ஹெலிகொப்டர் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.