October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வடக்கு கிழக்கில் முதலீடுகளை செய்ய இந்தியா ஆர்வம்

வடக்கு கிழக்கில் இந்திய முதலீட்டாளர்களின் முதலீடுகளை முன்னெடுப்பது குறித்து இந்தியா ஆர்வம் காட்டுவதாகவும் வடக்கு கிழக்கின் அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை வழங்க அது ஆயத்தமாக இருப்பதாகவும்  தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பில் இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இந்திய தூதுவர் கோபால் பாக்லேவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்திய தூதுவர் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் வடக்கு கிழக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்திய -இலங்கை பொருளாதார வேலைத்திட்டங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பல உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ள  நிலையில், இந்திய முதலீட்டாளர்களை வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முதலீடுகள் செய்யவும், அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்துமே பேசப்பட்டுள்ளது.

இதன்போது தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன், வடக்கு கிழக்கில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும், முதலீடுகளை செய்யவும் இந்தியா தயாராக இருப்பதாக தூதுவர் தெரிவித்துள்ளார்.

எனவே முதல் கட்ட நகர்வுகள்  சாதகமாக அமைந்துள்ள நிலையில் இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து  மிகவிரைவில் அடுத்த கட்ட சந்திப்புகளும் இடம்பெறும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.