முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததற்கு இந்திய மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது
தமிழகத்தின் குன்னூர் மலைப் பகுதிகள் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணித்த ஹெலிகொப்டர் நேற்று முற்பகல் விபத்துக்கு உள்ளானது.
இதில் பயணித்த முப்படைகளின் தளபதி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்ததாக விமானப்படையினரால் அறிவிக்கப்பட்டது .
இந்நிலையில் இந்த துயரச் சம்பவம் குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று மக்களவையில் விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்த விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடல் இன்று மாலைக்குள் டெல்லி கொண்டுவரப்படும் என மக்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் இராணுவ அதிகாரிகள் ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக முப்படைகளின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியுள்ளார்.
சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து பிபின் ராவத் உள்ளிட்டோர் பகல் 11.45 மணிக்கு புறப்பட்டனர் .
வெலிங்டனை அடைய 15 நிமிடங்களே இருந்த நிலையில் நண்பகல் 12 மணியளவில் தொடர்பு துண்டிக்கப்பட்டது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விபத்தில் ஒருவர் உயிர் தப்பியுள்ளதுடன், அவர் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் குறிபபிட்டுள்ளார்.