இந்தியாவில் இன்று இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் இந்திய முப்படையின் தலைமைத் தளபதி உட்பட 13 பேரும் மரணமடைந்துள்ளனர்.
இதுதொடர்பான தகவல்களை இந்திய விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
விபத்தில் முப்படையின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பான விசாரணை ஒன்று நடைபெறவுள்ளதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
சம்பவத்துக்கு இந்திய ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிபின் ராவத் இந்திய இராணுவத்தில் இணைந்து, 43 ஆண்டுகள் நாட்டுக்காக சேவையாற்றியுள்ளார்.
அவர் 1958 மார்ச் 16 ஆம் திகதி உத்தராகண்ட் மாநிலத்தில் பிறந்தார். அவர் 63 வயதில் மரணித்துள்ளார்.
முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் குடும்பம் பல தலைமுறைகளாக இந்திய இராணுவத்தில் சேவையாற்றி வந்துள்ளனர்.
பிபின் ராவத்தின் தந்தை லக்ஸ்மண் சிங் ராவத் இராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரல் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
2011 இல் முனைவர் பட்டம் பெற்ற அவர், அமெரிக்காவின் இராணுவ கமெண்ட் மற்றும் ஜெனரல் ஸ்டாப் கல்லூரியில் படித்து முடித்துள்ளார்.
இராணுவத் தளபதியாக பணியாற்றி வந்த பிபின் ராவத், கடந்த 2019 டிசம்பர் 30 ஆம் திகதி முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
இந்திய நாட்டின் முதல் முப்படைகளின் தலைமைத் தளபதி என்ற பெருமை அவருக்குரியது.