November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பெப்ரவரியில் மூன்றாவது அலை’

இந்தியாவில் ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் தொற்றால் பெப்ரவரி மாதமளவில் மூன்றாவது அலை ஏற்படலாம் என இந்திய விஞ்ஞானி மனீந்திர அகர்வால் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் தற்போது வரை 23 பேருக்கு ஒமிக்ரோன் பாதிப்பு உறுதியாகியுள்ளது என இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது.

இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 10 பேருக்கு இந்த தொற்று உறுதியாகியுள்ளது.இவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மூன்றாவது அலையின் தாக்கமானது இரண்டாவது அலையை விட குறைவாகத்தான் இருக்கும் என ஐஐடி பேராசிரியர் மனீந்திர அகர்வால் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றின் வேகத்தை கணித ரீதியில் கணித்துச் சொல்லும் நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள ஐஐடி பேராசிரியர் மனீந்திர அகர்வால் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மூன்றாவது அலை ஏற்பட்டால் அன்றாடம் ஒரு லட்சம் முதல் 1.5 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள ஒமிக்ரோன் பாதிப்பினை‌ வைத்து பார்க்கும்போது டெல்டா வைரசை போல் இது பாதிப்பை ஏற்படுத்தவில்லை என சொல்லப்படுகிறது.

இருந்தபோதும் டெல்டா பரவலின்போது பின்பற்றப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை தற்போதும் கடைப்பிடித்தால் இந்த ஒமிக்ரோன் பரவலின் உச்சத்தை தவிர்க்கலாம் என இந்திய விஞ்ஞானி அகர்வால் தெரிவித்திருக்கிறார்.

தென் ஆபிரிக்காவில் ஒமிக்ரோன் பரவல் அதிகமாக இருந்தாலும் மருத்துவமனையில் சேர்வோர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இருந்தபோதிலும் உலக சுகாதார அமைப்பானது இந்த உருமாறிய ஒமிக்ரோன் வைரஸானது கவலைக்குரிய திரிபு என பட்டியலிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஒமிக்ரோன் வைரஸ் தீவிர பாதிப்பு, உயிர் சேதத்தை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து இதுவரை உறுதியாகவில்லை எனக் கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு வரும் வாரங்களில் இதன் தாக்கம் குறித்து தெரியவரும் என குறிப்பிட்டுள்ளது.