
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குநர் சீனு ராமசாமி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூடல் நகர் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சீனு ராமசாமி, தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் விஜய் சேதுபதியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து, நீர் பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட சமூகப் பார்வையுள்ள அனைவரும் பாராட்டத்தக்க திரைப்படங்களை எடுத்தார்.
‘800’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என திரைத்துறையிலிருந்து முதலாவதாக எழுந்த குரல் இவருடையதுதான்.
இந்த நிலையில் இன்று காலை சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும், அவசரம்” என்று பதிவிட்டிருந்தார்.
https://twitter.com/seenuramasamy/status/1321304921929637892
பின்னர் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த சீனு ராமசாமி, தனக்கு அரசியல் சினிமா எடுக்கத் தெரிந்த அளவுக்கு சினிமாவில் அரசியல் தெரியாது எனக் குறிப்பிட்டார்.
“விஜய் சேதுபதியின் நலன் கருதி தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதிக்கக் கூடாது என்பதால் 800 பட விவகாரம் தொடர்பாக என்னுடைய கருத்துக்களை தெரிவித்தேன். ஆனால், நான் விஜய் சேதுபதிக்கு எதிரானவராக என்னைத் தொடர்ந்தும் சித்தரிக்க முயல்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.
மேலும், “வட்ஸ் அப் மூலமும், தொலைபேசியிலும் தொடர்ந்து மிரட்டல் வந்துகொண்டு இருக்கின்றன. சமூக வலைதளங்களில் ஆபாச வார்த்தைகளால் என்னை திட்டுகின்றனர். தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்ததால் எனக்கு மனப் பதட்டம் உருவானது.
அதனால், உடனே தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக சொன்னேன். விஜய் சேதுபதி ரசிகர்கள் என்னுடைய தம்பிகள். அவர்கள் என்னை மிரட்டுவதற்கு வாய்ப்பில்லை” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.