January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தீவிரவாதிகள் என சந்தேகத்தில் 13 தொழிலாளர்கள் சுட்டுக்கொலை: நாகாலந்து மாநிலத்தில் சம்பவம்

இந்தியாவின் நாகாலந்து மாநிலத்தில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 13 தொழிலாளர்கள் பாதுகாப்பு படையினரால் பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரர் உயிரிழந்துள்ளதாகவும், பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

நாகாலாந்தில் மியான்மர் எல்லையருகே, மான் மாவட்டம் ஒட்டிங் கிராமத்தில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அந்தப் பகுதியில் கடும் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு தேடுதலில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கும், அங்கிருந்த ஒரு குழுவினர் இடையே மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த மோதலில் குறித்த குழுவினரை தீவிரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு படையினர் சுட்டதாகவும் அதில் பொதுமக்கள் இருந்ததாகவும் பின்னர் தகவல் வெளியாகியிருக்கிறது .

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரும் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் பணிபுரிந்த கூலித் தொழிலாளர்கள் என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் பாதுகாப்பு படையினரின் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

அங்கு கலவரம் மூண்டதால்,சம்பவ இடத்திற்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிகழ்வு குறித்து கருத்து வெளியிட்டுள்ள நாகலாந்து மாநில முதல்வர் நெப்பியூ ரியோ , இது துரதிர்ஷ்டவசமான சம்பவம் எனவும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.