கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கமல்ஹாசன் கொரோனா தொற்றிலிருந்து முற்றிலுமாக குணமடைந்து விட்டதாகவும், சில நாட்களுக்கு தனிமையில் இருப்பார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் அவர் முழுவதுமாக குணமடைந்த நிலையில் வீடு திரும்பியிருக்கிறார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர் தனக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
முன்னதாக நடிகர் கமல்ஹாசன் சீக்கிரமே குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருக்கும் நடிகர் கமல்ஹாசன்,
“முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும்.அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும்.தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன்.எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன் ” என குறிப்பிட்டுள்ளார்.