July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் விவாதத்திற்கு உள்ளான இந்திய – இலங்கை மீனவர் பிரச்சனை

குஜராத் மீனவர்களுக்கு ஒரு நியாயம், தமிழக மீனவர்களுக்கு ஒரு நியாயமா? என மக்களவையில் தமிழக எம்.பி.சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு மத்திய அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சு. வெங்கடேசன் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதை இந்த அவையின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன் எனக் கூறிய தமிழக எம்.பி. வெங்கடேசன், இந்த பிரச்சனையில்
மத்திய அரசு எந்தவித தலையீடும் செய்யாமல் இருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் துவாரகா மாவட்டத்தில், குஜராத் மீனவர் பாகிஸ்தான் கடற்படையினரால் தாக்கப்பட்டதற்கு உடனடியாக மத்திய அரசு தனது கண்டனத்தை பதிவு செய்தது.

அதேபோல், பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரிகளையும் அழைத்து நேரடியாக கண்டனத்தை தெரிவித்தது என மக்களவையில் தமிழக எம்.பி. சுட்டிக்காட்டினார்.

ஆனால், தமிழக மீனவர்கள் விடயத்தில் எந்த கண்டனத்தையும் இலங்கைக்கு தெரிவிக்காதது, இதில் பாரபட்சம் ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் ஏராளமானோர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார் தமிழக எம்.பி.சு.வெங்கடேசன்.

அதேபோல், இலங்கை சிறைகளில் பலர் அடைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக இந்திய அரசின் நடவடிக்கை கோரி அக்டோபர் மாதம் தமிழக முதல்வர் கடிதம் எழுதியதாகவும் ஆனால் இதுவரை மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்பாக, இந்திய அரசு இதுவரை ஒரு எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லை எனவும், இலங்கை தூதரக அதிகாரிகளை அழைத்து ஏன் எந்தவிதமான கண்டனங்களையும் பதிவு செய்யவில்லை எனவும் அவர் மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

குஜராத் மீனவர்களை தாக்கிய பாகிஸ்தான் அரசுக்கு ஒரு அணுகுமுறை, தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை அரசுக்கு வேறு அணுகுமுறையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறான வேறுபாடுகள் கடும் கண்டனத்துக்குரியது என மக்களவையில் கூறிய சு.வெங்கடேசன், தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமைகள் முழுமையாக உறுதிப்படுத்த வலியுறுத்தி இருக்கிறார்.

ஆகவே, இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு மத்திய அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக எம்.பி.வலியுறுத்தியுள்ளார்.