File Photo
இந்தியா – ரஷ்யா இடையேயான இருதரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வரும் டிசம்பர் 6 ஆம் திகதி இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா ரஷ்யா இடையேயான இருதரப்பு உச்சிமாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த இரு தரப்பு உச்சிமாநாடு நடைபெறவில்லை.
இந்நிலையில் வரும் 6 ஆம் திகதி டெல்லியில் இந்த மாநாடு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதன்போது, இந்தியா வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது இராணுவம்,தொழில்நுட்பம், வணிகம்போன்ற துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கே ஷோய்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் ஆகியோரும் இந்தியா வருகை தரவுள்ளனர்.
இந்தியா வருகை தரும் ரஷ்ய குழுவினர் , மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.