January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய அணியின் தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் நடக்குமா?

Photo: Twitter/BCCI

தென்னாபிரிக்காவில் வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் எனப்படுகின்ற புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடன் டி-20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது.

நியூசிலாந்து டெஸ்ட் தொடர் டிசம்பர் 7ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இதன் பின்னர் எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டி-20 போட்டிகள் என நெடும் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் தற்போது வேகமாக பரவிவரும் ஒமிக்ரோன் எனப்படுகின்ற புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக இந்திய அணியின் தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் ரத்தாகும் சூழல் உருவாக்கியுள்து.

இந்திய அணி ஏழு வாரங்கள் தென்னாபிரிக்காவில் தங்கியிருந்து விளையாடவுள்ளது. எனவே அதற்குள் இந்திய வீரர்களுக்கு ஏதேனும் பாதிப்பு வந்துவிட்டால் சிரமமாகிவிடும் என பிசிசிஐ தயக்கம் காட்டி வருகிறது.

குறிப்பாக தற்போது அதிக பாதிப்புகளை கொண்டுள்ள ஜொஹனெஸ்பர்க் மற்றும் ப்ரீடோரியா ஆகிய நகரங்களில் தான் 2 டெஸ்ட் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்னாபிரிக்காவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய ‘ஏ’ அணி வீரர்களை திரும்பி நாட்டிற்கு அழைக்க பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தியா ‘ஏ’ மற்றும் தென்னாபிரிக்க ‘ஏ’அணிகள் அதிகாரப்பூர்வமற்ற 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அவர்கள் விரைவில் நாட்டிற்கு அழைத்து வரப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குறிப்பிட்டுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், தென்னாபிரிக்காவில் தற்போதைய நிலவரம் எப்படி உள்ளது என்பது தெரியாமல் தற்போதைக்கு எதையும் கூற முடியாது. இந்திய வீரர்கள் டிசம்பர் 8 அல்லது 9 ஆம் திகதியன்று தென்னாபிரிக்காவுக்கு புறப்பட்டுவிடும் என கூறியுள்ளார்.

எது எப்படி இருந்தாலும், மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெற்றால் மட்டுமே இந்திய வீரர்கள் செல்லும் என தெரிகிறது.

இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ‘பிசிசிஐ மட்டுமல்ல, ஒவ்வொரு கிரிக்கெட் சபையும் புதிய கொவிட்-19 மாறுபாடு தோன்றிய நாட்டிற்கு அணியை அனுப்பும் முன் இந்திய அரசாங்கத்திடம் ஆலோசனை பெற வேண்டும்.

கொரோனா அச்சுறுத்தல் உள்ள நாட்டிற்கு அணியை அனுப்புவது சரியல்ல. பிசிசிஐ எங்களிடம் ஆலோசனை கேட்டால் அது குறித்து ஆலோசிப்போம்’ என்றார்.