
வங்கக் கடலில், தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நாளை (29) புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் வட கடலோரப் பகுதிகளில் உள்ள பகுதிகள், சென்னை , விவசாய பகுதியான டெல்டா மாவட்டங்கள் என 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது.
தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் பெய்த மழைக்கு ஒரேநாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் தொடர்ந்து தமிழகத்தின் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது .
இதனால் விவசாய பகுதியான டெல்டா மாவட்டங்களில், தஞ்சை திருவையாறு, மயிலாடுதுறை பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ள நீர் புகுந்து வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
தமிழகத்தின் விவசாய பகுதியான டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தஞ்சையில் மழைக்கு 159 வீடுகள் இடிந்து சேதமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனால் கடலோர மாவட்ட பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
28, 29, 30 மற்றும் டிச. 1-ம் திகதிகளில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
அந்தமான் கடற்பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் இடையிடையே 60 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.