July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சென்னையில் தொடரும் கன மழையால் மீண்டும் வெள்ள அபாயம்

சென்னையில் தொடரும் மழையால் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

சுரங்கப்பாதையில் வெள்ள நீர் சூழ்ந்ததால், அதில் சென்ற அரச பேருந்தும் பயணிகளுடன் சிக்கிக்கொண்டது. இதையடுத்து பயணிகள் ஒவ்வொருவராக பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சென்னை சுற்று வட்டார பகுதிகளில் அதிக மழை பதிவாகி இருக்கிறது. இதனால் மழையின் தீவிரத்தைக் கருதி சென்னைக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர் மழை காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளாக இருக்கும் தியாகராயநகர், திரு.வி.க.நகர், அண்ணா சாலை, ரிச்சி தெரு, எழும்பூரில் உள்ள காவல் ஆணையர் அலுவலகம், உயர் நீதிமன்றம், கே.கே.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழைநீர் தேங்கியுள்ளது.

இதனால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியினர் பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த சில தினங்களுக்கு சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை அடையாறு, கூவம் நதிக்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி உள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர், விழுப்புரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, தஞ்சை, நெல்லை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருவாரூர், திருச்சி, திருவள்ளுர், நாகை, அரியலூர், சேலம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று பாடசாலை, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.