டெல்லியில் இருந்து தமிழகம் வந்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.
2026 இல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தற்போதில் இருந்தே வியூகங்களை வகுத்து, மாவட்டம் தோறும் பாஜக அலுவலகங்களை திறக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது.
இந்நிலையில், இதன் முதல் நிகழ்வாக திருப்பூர் மாவட்டத்தில் பாஜகவின் மாவட்ட அலுவலகம் திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில் டெல்லியிலிருந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா வந்து, கலந்துகொண்டுள்ளார்.
அங்கிருந்தவாறே, திருநெல்வேலி, ஈரோடு, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் காணொலி வாயிலாக அலுவலகங்களை திறந்து வைத்திருக்கிறார் ஜே.பி. நட்டா.
இந்தியாவில் உள்ள 720 மாவட்டங்களில், 473 மாவட்டங்களில் கட்சி அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன என நட்டா தெரிவித்துள்ளார்.
வாரிசு அரசியல் என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என திருப்பூர் நிகழ்வில் அவர் கூறியுள்ளார்.
திமுக என்றால் ஊழல் கட்சி எனக் கூறியுள்ள ஜே.பி. நட்டா திமுகவும், ஊழலும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என சாடியுள்ளார்.
குடும்பத்தில் இருப்பவர்களை காட்டிலும் திமுகவில் வேறு யாரும் முன்னுக்கு வரமுடியாது என வெளிப்படையாக பேசியுள்ளார் பாஜக தேசிய தலைவர்.
வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு எதிரானது எனக் கூறிய ஜே.பி. நட்டா, பாஜகவில் அப்படி இல்லை எனவும் இங்கு மேடையில் இருப்பவர்கள் எவ்வித பின்புலத்திலும் இல்லாதவர்கள் என தெரிவித்திருக்கிறார்.
இந்திய பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது என ஜே.பி. நட்டா புகழாரம் சூட்டியுள்ளார்.