July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெயலலிதா இல்லம் அரசுடைமை ஆக்கியது செல்லாது; சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை, போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

வேதா இல்லத்தை ஜெயலலிதாவின் வாரிசுதாரர்களாக அறிவிக்கப்பட்ட தீபா மற்றும் தீபக்கிடம் 3 வாரங்களுக்குள் ஒப்படைக்க சென்னை மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அ.தி.மு.க அரசு அறிவித்திருந்தது.

பின்னர் சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையமும் அங்குள்ள அசையும் சொத்துக்களும் அரசுடைமையாக்கப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறியப்பட்ட ,ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான, தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சேஷசாயி, வேதா இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது எனக்கூறி அதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார்.

மேலும் 3 வாரத்தில் போயஸ் தோட்ட இல்லத்தை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வேதா நிலையம் வழக்கில் நீதிபதி என்.சேஷசாயி பிறப்பித்த தீர்ப்பில், ஒரு சொத்தை கையகப்படுத்தும் முன் சம்பந்தப்பட்டவர்களுக்கு, 60 நாட்களுக்கு முன் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்ற விதி அரசால் பின்பற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேதா நிலையத்திற்கு யாரும் உரிமைதாரர்களே இல்லை என்ற அடிப்படையில் அப்போதைய அ.தி.மு.க அரசு தானே அதிகாரத்தை கையில் எடுத்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த வழக்கில் அரசியல் தலைமையையும், சொத்தின் உரிமையையும் பிரித்துபார்க்க அவர்கள் தவறிவிட்டார்கள் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

உரிய விதிகளை பின்பற்றாமல், வேதா இல்லம் கையகப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறியுள்ள நீதிமன்றம், வேதா இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது ‌‌.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா‍, நேர்மையான இந்த தீர்ப்பை மகிழ்வுடன் வரவேற்கிறோம் எனக் கூறியுள்ளார்.

இது தாங்கள் எதிர்பார்க்காத தீர்ப்பு எனவும், இவ்வளவு விரைவாக இப்படி ஒரு தீர்ப்பு கிடைக்குமென உண்மையிலேயே நினைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடும் போராட்டத்திற்கு பின்னர் தான் இந்த தீர்ப்பை அடைய முடியும் என நினைத்ததாக கூறியுள்ளார் தீபா.