July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியா – இலங்கை இடையே படகு ஆம்புலன்ஸ் சேவை; இலங்கைக்கான தூதருடன் புதுச்சேரி ஆளுநர் ஆலோசனை

அரசு முறைப் பயணமாக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே புதுச்சேரிக்கு சென்றுள்ளார்.

அங்கு ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியுள்ளார் .

தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவைக்கு சென்ற கோபால் பாக்லே முதல்வர் அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.

இந்தப் பயணத்தின் போது இந்தியா – இலங்கை இடையே படகு அவசர ஊர்தி திட்டமொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லேவுடன், ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பின்போது காரைக்கால் மற்றும் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்தினை மீண்டும் தொடங்குவது குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல் இந்தியா, இலங்கை இடையே (Boat-Ambulance) படகு அவசர ஊர்தி திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆலோசனைை நடத்தியிருக்கிறார்.

கடலுக்குச் செல்லும் மீனவர்களின் அவசரகால தேவையின் போது, இந்த படகு அவசர ஊர்தி, பயன்மிக்கதாக அமையும் என்பதால் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.

மேலும் மீனவர்கள் பிரச்சினை தொடர்பாகவும் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதர் ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர்.

மீனவர்களின் பிரச்சினைகளை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும் என அறிவுறுத்தியுள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர், அவர்களின் உயிர் ,வாழ்வாதாரம், உடமை பாதுகாப்பு ,போன்றவற்றை கருத்தில் கொண்டு தீர்வு காண வேண்டுமென இலங்கைக்கான இந்திய தூதரிடம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள 21 தமிழக மீனவர்களின் விடுதலை குறித்தும் இலங்கை அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டறிந்துள்ளார்.