January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு; 17 பேர் மரணம்

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் கனமழை காரணமாக இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை என கூறப்படுகிறது.

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை சென்னை அருகே கரையைக் கடந்தது. இது சென்னைக்கு கடந்த முறையைப் போன்று வெள்ளப் பெருக்கு ஏற்படும் அளவிற்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், எதிர்பாராத விதமாக இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து ஆந்திராவில் நிலைகொண்டது.

இதனால், ஆந்திர மாநிலத்தின் சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், ராஜம்பேட்டையில், சத்யவதி நதியின் அருகே நந்தலூரில் 3 அரச பேருந்துகள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டன.

இதிலிருந்து 12 பேர் சடலங்களாக மீட்கப்பட்ட நிலையில், அதில் பயணித்த ஏனையவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பதி, நெல்லூரில் மேலும் 5 பேர் என மொத்தம் 17 பேர் வெள்ளத்தில் சிக்கியும் மின்சாரம் தாக்கியும் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் நேற்று வெள்ளத்தில் சிக்கிய ஏராளமானோர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

பல ஏரிகள் முழுவதுமாக நிரம்பியதால் அவை உடைந்து, பயிர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

சித்தூர் மாவட்டத்தில் உள்ள நீவா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஏராளமான கால்நடைகள் மக்களின் கண் முன்பே நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

This slideshow requires JavaScript.

அதேபோன்று, கல்யாணி அணை நிரம்பி, 2 மதகுகள் திறக்கப்பட்டதால் சுவர்ணமுகி நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது

இதனால், திருப்பதி பெருமாள் கோவிலில் இருந்து நெல்லூர் மாவட்டம் தடா வரை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

முதன்முறையாக, திருப்பதி பெருமாள் கோவில் செல்லும் மலைப்பாதையில் அடித்துச்செல்லும் அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கார்கள், பைக்குகள், கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

அனந்தபூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய வாகனத்தில் இருந்த 10 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

திருப்பதி திருமலையில் எங்கு பார்த்தாலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் மலைப் பாதைகள் மூடப்படுவதாக திருப்பதி கோவில் நிர்வாகம் அறிவிப்பு விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது

அதேபோன்று, தமிழகத்திலும் விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன.

இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்த மக்கள் நிவாரண முகாம்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.