வினைத்திறன்மிக்க சமூக அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு இந்திய அரசாங்கத்தின் நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இவ்விடயமாக பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷ முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
2005ஆம் ஆண்டிலிருந்தே இலங்கை- இந்திய அரசாங்கங்களுக்கிடையே இவ்வாறான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இணை அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையில் 300 மில்லியன் ரூபாய்க்குட்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவிகளை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் பாடசாலைக் கட்டடங்கள், பல்கலைக்கழக கட்டடங்கள் மற்றும் வீடபிவிருத்தி என பல்வேறு திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் பின்தங்கிய பிரதேசங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன” என்றார்.