June 28, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற முடிவு செய்திருக்கிறோம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இந்திய பிரதமர், இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார் அப்போது பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்தும் பிரச்சினைகள் பற்றியும் அவர் விவரித்துள்ளார்.

அதன்போது அவர், விவசாயிகள் வேண்டாம் எனக் கூறி வரும் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வட மாநில விவசாயிகள் தீவிர போராட்டத்தில் இறங்கியிருந்தனர். டெல்லியை முற்றுகையிட்டு பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இன்றுவரை அந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில் குறித்த சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார்.

இதனால் விவசாயிகள் போராட்டங்களை கைவிட்டு தத்தமது பணிகளை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்க பாடுபடுகிறோம் எனக் கூறியுள்ள பிரதமர் விவசாயிகளின் பிரச்னைகளை அருகிலிருந்து பார்த்து உணர்ந்து வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

நம் நாட்டில் 100 விவசாயிகளில் 80 பேர் சிறு விவசாயிகள், 2 ஏக்கருக்கும் குறைவான நிலமே அவர்களிடம் உள்ளது என தெரிவித்திருக்கிறார்.

விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க 2014ஆம் ஆண்டிலிருந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம், வேளாண் உற்பத்தியை அதிகரித்துள்ளோம்.

வேளாண்மை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்துள்ளோம், விவசாயிகள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் கடந்த காலத்தில் 5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்