July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் தொடரும் மழை!

வங்கக் கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதனால் நேற்று (12) முதல் கன்னியாகுமரி நெல்லையில் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் சேலம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் கன்னியாகுமரி உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த மழை காரணமாக வெள்ளப் பெருக்கெடுத்துள்ளது.

இதனால் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கன்னியாகுமரிக்கு விரைந்துள்ளனர். வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் வீட்டுக்குள் சிக்கிக் கொண்ட மக்கள் தவித்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது

மேலும், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க பேரிடர் மீட்புக் குழுவினர் குமரி மாவட்டத்திற்கு விரைந்துள்ளனர். நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே கனமழையால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், சென்னையில் இன்னும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் வடியாத நிலையில் மீண்டும் தாழமுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், கரையோர பிரதேசங்களில் கனமழை பெய்து வருவதுடன், சென்னையில் மீட்பு பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது.