July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் மீண்டும் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: அதிக மழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடையக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் எதிர்வரும் நாட்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சென்னையில் கனமழை தற்போது ஓய்ந்தும், வெள்ளம் வடியாமல் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் தாழ்வான பகுதிகள் முக்கிய சாலைகள் இன்னும் வெள்ளக்காடாகவே காட்சியளிப்பதுடன் மீட்புப் பணிகள் பல பகுதிகளிலும் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மீண்டும் தாழமுக்கம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக சென்னையை சுற்றியுள்ள நீர் ஆதாரங்களான ஏரிகள் நிரம்பி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் சென்னை ஊடாகவே கடலில் கலக்கின்றன. இந்நிலையில் இன்னொரு மழை வந்தால் சென்னை முழுவதும் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,699 நபர்கள் 44 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில், சென்னை, சிவகங்கை, நீலகிரி, மாவட்டத்தில் 3 நபர்கள் உயிரிழந்துள்ளதுடன் 64 கால்நடை இறப்பு பதிவாகியுள்ளது.

மழை வெள்ளத்தால் மொத்தம் 534 குடிசைகளும், 129 வீடுகள் பகுதியாகவும், 4 வீடு முழுமையாகவும் ஆக மொத்தம் 133 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

மழை நீர் தேங்கியுள்ள 530 பகுதிகளுள், 119 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர், ராட்சத பம்புகள் மூலம் அகற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .

எஞ்சிய 411 பகுதிகளில் மழை நீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்ததுடன் தாம்பரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அத்துடன் சென்னை கோட்டூர்புரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.