
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளஅமெரிக்கா பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பெருக்கும் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் இடையில் புதுடில்லியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
ஒரு மணிநேரத்திற்கும் மேல் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பிற்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது உட்பட இரு தரப்பு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக இரு நாடுகளினதும் கடற்படையினர் மத்தியிலான பாரிய ஒத்துழைப்பு குறித்து இரு நாடுகளினதும் பாதுகாப்பு அமைச்சர்களும் ஆராய்ந்துள்ளனர் என புதுடில்லி செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்தியாவும் அமெரிக்காவும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை கொண்டுள்ள இந்தோ-பசுபிக் விவகாரம் குறித்தும் இரு தரப்பினரும் ஆராய்ந்துள்ளனர்.
நவம்பரில் மலபாரில் இடம்பெறவுள்ள கூட்டு ஒத்திகையில் புதுடில்லி அவுஸ்திரேலியாவை இணைத்துக்கொண்டுள்ளதை அமெரிக்கா பாராட்டியுள்ள அதேவேளை,இந்தியாவின் பாதுகாப்பு திட்டங்களில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்யவேண்டும் என இந்திய பாதுகாப்பு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை அமெரிக்க இராஜாங்க செயலாளரும் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
நாளை இடம்பெறவுள்ள 2-2 எனப்படும் சந்திப்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளரும் பாதுகாப்பு செயலாளரும் கலந்துகொள்ளவுள்ளனர்.