July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுப்பு

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது.

இது நாளை (11) மாலை வட தமிழகம், தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 7 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில் உள்ளிட்ட சுற்றுலா தளங்களை நாளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் கரையோரப் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் ஆட்சியர் ராகுல்நாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையை ஒட்டி புயல் நாளை கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டு இருப்பதால் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிக மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னையில் விடாது பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது .

அதேபோல், ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை கரையைக் கடக்குமென்பதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழையோ, அதி கனமழையோ பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் விடாது பெய்யும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.