இந்தியாவின் உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை 96 நாடுகள் அங்கீகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் போன்றவற்றுக்கு அனுமதி வழங்க சில நாடுகள் தயங்கி வந்தன.
கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கு வெளிநாடுகளில் அனுமதி கிடைக்கப்பெற்றாலும் கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், வெளிநாடுகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் போன்றவற்றுக்கு 96 நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன.
இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ‘கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்தது’ எனக் கூறியுள்ளார்.
அத்துடன் உலக அளவில் 96 நாடுகள் இந்த இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, சுவிட்ஸர்லாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் தற்போது இந்த தடுப்பூசிகளை அங்கீகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இதுவரை 109 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.