July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்தில் அதிக கன மழைக்கு வாய்ப்பு

தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து 11 ஆம் திகதி வட தமிழகம் அருகே வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்  வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அதிக கனமழை பெய்யக்கூடும்  என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தொடர் மழையால் விழுப்புரம், கடலூர் மற்றும் புதுவைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 6 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

கன மழை காரணமாக திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடல் சீற்றம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.