July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ராசாக்கண்ணுவின் மனைவிக்கு சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக நடிகர் லாரன்ஸ் அறிவிப்பு!

பொய் வழக்கில் கைதாகி பொலிஸாரின் சித்திரவதையால் உயரிழந்த ராசாக்கண்ணுவின் மனைவியான பார்வதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சொந்த செலவில் வீடு கட்டி தருவதாக அறிவித்திருக்கிறார்.

ஜெய் பீம் படத்தின் மூலம் ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி வறுமையில் உள்ளதை அறிந்த ராகவா லாரன்ஸ் வீடு கட்டி தருவதாக தெரிவித்திருக்கிறார்.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’.

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்ப பெற்றுள்ளது. பழங்குடியின குடும்பத்தினருக்கு தொண்ணூறுகளில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

இப்படத்தில் காட்டப்பட்ட ராசாக்கண்ணு மீது பொய் வழக்குப் போடப்பட்டு பொலிஸ் சித்ரவதையில் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு நீண்ட போராட்டத்திற்கு இடையே குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஜெய் பீம் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி வறுமையால் வாடுவதை அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகவா லாரன்ஸ்,

செய்யாத குற்றத்திற்காக சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவின் இன்றைய வாழ்க்கை நிலையை வலைப்பேச்சு மூலம் அறிந்ததாக ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் மூலம் மேலும் விவரங்களைக் கேட்டறிந்ததும் கூடுதலாக துயருற்றேன்.

பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறேன்.

ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவின் வறுமை நிலையினை என் கவனத்துக்கு  கொண்டு வந்த வலைப்பேச்சு குழுவினருக்கு என் நன்றிகள் என ராகவா லாரன்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

28 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான துயர நிகழ்வை, இன்றைக்கு தமிழகம் முழுக்க பேசு பொருளாக்கிய ‘ஜெய் பீம்’ படக்குழுவினருக்கும், ‘ஜெய்பீம்’ படத்தை உயரிய கலைப்படைப்பாக மாற்றிய சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும், இயக்குநர் த.செ.ஞானவேலுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும் நன்றியும் என ராகவா லாரன்ஸ் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் படத்தைப் பார்த்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.