January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் முதலிடம்

உலகின் பிரபல தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடமும்  தொடர்ந்து 3 ஆவது முறையாக முதலிடம் பிடித்துள்ளதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க தலைநகர் வொஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம் பிரபலமான உலக தலைவர்கள் குறித்து வருடம்தோறும் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவை வெளியிட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்து மெக்ஸிகோ அதிபர் லோபஸ் ஒபரடோர் 66 சதவீத வாக்குகளை பெற்று 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இத்தாலி பிரதமர் மரியோ திராகி 58 சதவீத வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளடன், ஜெர்மனி சான்சியூலராக இருந்த ஏஞ்சலா மெர்கெல் 54 சதவிகித வாக்குகளைப் பெற்று 4ஆவது இடத்தில் இருக்கிறார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட்மோரிசன் 47 சதவிகித வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷாடா, தென்கொரிய அதிபர் மூன் ஜோ-இன் , பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ,ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் , ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளனர்.

இந்த கருத்துக்கணிப்பில் கடந்த வருடத்தைவிட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஆகியோர் பின்தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், மெக்ஸிகோ ஆகிய 13 நாடுகளின் மக்களிடம் அண்மையில் மார்னிங் கன்சல்ட் நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது .

இந்த கருத்துக் கணிப்பில் மூன்றாவது முறையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியாவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 70 சதவீதம் பேர் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை அங்கீகரித்து ஆதரவு அளித்துள்ளதாகவும் ,24 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் மார்னிங் கன்சல்ட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம், இந்த ஆண்டில் இதுவரை 3 முறை கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது.

இந்த கருத்துக் கணிப்புகளில் பிரதமர் நரேந்திர மோடியே தொடர்ந்து முன்னிலை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் கருத்துக் கணிப்பை பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் வரவேற்றுள்ளனர்.