தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக தலைநகர் சென்னை வெள்ள நீரில் தத்தளித்து வருகிறது. இதனால் மீட்புப் பணிகளில் சுமார் 1000 தீயணைப்பு மற்றும் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் வெள்ளத்தில் சிக்கி கொண்ட 107 பேரை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
கடந்த இரு நாட்களாக பெய்து வரும் கனமழையால் சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இதேவேளை தொடரும் கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிற மாவட்டங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சென்னை வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் ஏரிகள் திறந்துவிடப்பட்டுள்ளதால் கூவம் ஆற்றை ஒட்டியுள்ள சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேளை தமிழகத்தில் தொடர் மழை வெள்ளம் காரணமாக 19 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.