July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் தொடர் கனமழையால் ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் மலைப்பிரதேசங்களை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதுடன், திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை, பாலாற்றின் கரையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது நாளாக தொடரும் கனமழையின் காரணமாக பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 40 ஆண்டுகளுக்கு பிறகு அங்குள்ள திருமூர்த்தி மலை கோவிலை காட்டாற்று வெள்ளம் முழுவதுமாக மூழ்கடித்து செல்கிறது.

மேலும், நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கோயிலின் முன்பிரகாரத்தில் சுமார் 7 அடி உயரத்தில் காட்டாற்று வெள்ளம் கோவிலை மூழ்கடித்தபடி திருமூர்த்தி அணைக்கு சென்று கொண்டிருக்கிறது.

பொள்ளாச்சி ,உடுமலைப்பேட்டை திருமூர்த்தி அருவியில் உள்ள கோயிலை சுற்றி வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் வெளியே வர முடியாமல் திணறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமூர்த்தி மலையில் பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் ஆலயம். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் குடிகொண்டுள்ள கோயிலாக இந்தத் திருத்தலம் விளங்குகின்றது.

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து வணங்கிச் செல்வர்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று திருமூர்த்தி அணைப்பகுதிக்கும், கோவிலுக்கும் வந்திருந்தனர்.

இந்நிலையில் காட்டாறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பஞ்சலிங்க அருவி வழியாக பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதனால் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் ஆலயத்தை திடீரென வெள்ள நீர் சூழ்ந்தது.

இதனைத் தொடர்ந்து கோயில் நடை அடைக்கப்பட்டு அங்கிருந்த பக்தர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் வெளியேற்றப்பட்டனர்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் கோயில் மூழ்கியதால் அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.