July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் சீனா; அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிக்கையில் தகவல்

இந்திய எல்லைப் பகுதிகளில் ஆங்காங்கே சீனா அத்துமீறி குடியிருப்புகளை கட்டி வருவதாக அமெரிக்க பாதுகாப்பு துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதிகளில் அத்துமீறல் நடவடிக்கையை தவிர்க்கும் பொருட்டு சீனா- இந்தியா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், மறைமுகமாக சீன இராணுவம் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவது தற்போது தெரிய வந்திருக்கிறது.

இவ்வாறான ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதால் எல்லைப்பகுதியில் அழுத்தம் அதிகரிப்பதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இந்திய எல்லைப் பகுதியில் பிரச்சினைக்குரிய இடங்களில் நூற்றுக்கணக்கான வீடுகளை சீனா கட்டியுள்ளதாக செயற்கைக்கோள் புகைப்படங்களை அமெரிக்க பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில், 100 இற்கும் அதிகமான வீடுகளை சீனா கட்டியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

டிசரி ச்சைவ் ,மெக் மகன் நதிக்கரையை ஒட்டியப் பகுதிகள், மேலும் சில இடங்களில் சீன இராணுவம் குடியிருப்புகளையும், போர் பயிற்சிக்குத் தேவையான கட்டமைப்புகளையும் உருவாக்கி வருவதாக அமெரிக்க இராணுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

சீன இராணுவத்தினர் இந்திய எல்லைப் பகுதிகளில் தொடர் அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை அமெரிக்க இராணுவம் தற்போது சுட்டிக்காட்டியுள்ளது.

இந்திய எல்லைப் பகுதியில் சீன இராணுவத்தின் ஆக்கிரமிப்பு தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பாதுகாப்புத் துறை சமர்ப்பித்திருக்கும் அறிக்கையிலேயே இந்தத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன .

அமெரிக்காவின் இந்த அறிக்கைக்கு பதில் அளித்துள்ள இந்திய அரசு, சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் , தமது தரப்பிலும் எல்லைகள் பலப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.