November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கைத் தமிழர்களுக்கு தி.மு.க உற்ற துணையாக நிற்கும்’; நலத்திட்டங்களை தொடங்கி வைத்து தமிழக முதலமைச்சர் பேச்சு

என்றைக்கும் தி.மு.க. வினர் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், உடன்பிறப்பாக நினைத்துக் கொள்ளுங்கள், இலங்கைத் தமிழர்களுக்கு இந்த அரசு உற்ற துணையாக நிற்கும் என ஸ்டாலின் நம்பிக்கை அளித்திருக்கிறார்.

புலம்பெயர் இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.225.86 கோடியில் புதிய திட்டங்களை வேலூரில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

அத்தோடு வேலூர் சென்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மேல்மொணவூரில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, முகாமில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.

தமிழகத்தில் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு ரூ.142.16 கோடியில் 3,510 குடியிருப்புகள் கட்டும் திட்டம் உள்பட ரூ. 225.86 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு , அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

தமிழகப் பொது மறுவாழ்வுத் துறை சார்பில் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கான புதிய திட்டங்களுக்கான அடிக்கல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வேலூர் அடுத்த மேல்மொணவூரில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலைய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

ரூ.142.16 கோடியில் 3,510 குடியிருப்புகள் கட்டுமான திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

அதேபோல் 78 முகாம்களுக்கு ரூ.12.41 கோடியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதுடன், 18,890 குடும்பங்களுக்கு எரிவாயு உருளை இணைப்புடன் உபகரணங்கள் வழங்குதல், 58,747 பேருக்கு உயர்த்தப்பட்ட பணக்கொடை வழங்குதல் உள்ளிட்ட மொத்தம் ரூ.225.86 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது .

நிகழ்வுக்கு வருகை தந்திருந்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இடம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கான, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளார்.

இதன்போது பேசிய முதலமைச்சர், ‘நீங்கள் அகதிகள் இல்லை, அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது என முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 106 முகாம்களில் 19,046 குடியிருப்புகளில் மிகவும் பழுதடைந்த 7,469 குடியிருப்புகள் மீளவும் கட்டப்பட இருப்பதாக தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் கட்டமாக 290 சதுர அடி பரப்பளவுள்ள 3,510 புதிய வீடுகள் கட்டப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

1997 இல் முதல்வராக கருணாநிதி இருந்தபோது இலங்கை தமிழர்களுக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியதாக ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக நாம் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறியுள்ள தமிழக முதலமைச்சர், 1983 முதல் ஈழத்தில் இருந்து இங்கு வந்து கொண்டிருக்கிறீர்கள்.

அவ்வாறு வந்தவர்கள் முகாம்களிலும் சிலர் வெளியிலும் தங்கியுள்ளதாகவும் தற்போது, தி.மு.க அரசு பொறுப்பேற்றதும் இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்   முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இலங்கைத் தமிழர்களுக்காக 1997-ல் 3,594 புதிய வீடுகள் கட்டப்பட்டதாகவும் ,1998-99 இல் 3,816 வீடுகள் கட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2009 இல் 100 கோடி ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.