November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா கடுமையாக போராடி வருகிறது’: இந்திய பிரதமர்

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா கடுமையாக போராடி வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இந்தப் போராட்டத்திற்கான பலன்கள் விரைவில் தெரியவரும் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் மாநாட்டில் உரையாற்றிய மோடி, எதிர்வரும் 2070 ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜியம் கரியமிலவாயு மாசு என்ற இலக்கை, இந்தியா எட்டும் என காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் உறுதியளித்துள்ளார்.

பாரிஸ் ஒப்பந்தத்தின்படி செயல்பட்ட ஒரே பெரிய நாடு இந்தியாதான் என்பதை உலக நாடுகள் அறியும் என்பதுடன், காலநிலை மாற்றத்தை இந்தியா தனது அனைத்து கொள்கைகளிலும் முக்கிய கருப்பொருளாக கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தனது உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஐந்து வாக்குறுதிகளை அளித்துள்ளதுடன், பொருளாதாரத்தில் கார்பனின் பங்களிப்பை 45 விகித அளவு இந்தியா குறைக்கும் என்றும் மோடி உறுதியளித்துள்ளார்.

2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது மின்சார தேவையில் 50 விகிதத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பெறும் எனவும், தற்போது முதலே, தொடங்கப்படும் திட்டங்கள் மூலம் 2030-க்குள் இந்தியா தனது கரியமிலவாயு மாசை ஒரு பில்லியன் டன் அளவுக்கு குறைக்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2030 ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் அளவுக்கு புதைப் படிம எரிபொருள் அல்லாத வழிகளில் மின்சார உற்பத்தி திறன் பெருக்கப்படும் எனவும் 2070 ஆம் ஆண்டுக்குள் இந்தியா பூஜ்ஜியம் கரியமில வாயு மாசு என்ற இலக்கை அடையும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் .

இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்வின்போது பல நாட்டுத் தலைவர்களையும் சந்தித்து பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.