கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பெங்களூரு கண்டீரா ஸ்டூடியோவில் ஆயிரக் கணக்கான ரசிகர்களின் கண்ணீர் அஞ்சலியுடன், இன்று காலை அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கன்னட சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார், நேற்று முன்தினம் பெங்களூருவில் திடீர் மாரடைப்பால் காலமானார்.
அவரது விருப்பப்படி உடனடியாக கண்கள் தானம்செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை அமெரிக்காவில் படித்துவந்த புனித் ராஜ்குமாரின் மகள் திரிதி உடனடியாக விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளார்.
அவரது வருகை தாமதம் ஆனதால் சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டன.
டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பெங்களூரு வந்த திரிதி, கண்டீரவா ஸ்டேடியத்தில் தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார்.
மாரடைப்பால் காலமான கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள் , ரசிகர்கள் உட்பட லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த புனித் ராஜ்குமாரின் உடலுக்கு கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டிருந்த புனித் ராஜ்குமாரின் உடலுக்கு நேற்று லட்சக்கணக்கான ரசிகர்களும் ,பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்..
மாநிலம் முழுவதும் முக்கியஇடங்களில் அவரது புகைப்படங்களை வைத்து மலர்களை தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர்கள் சிரஞ்சீவி, பிரபுதேவா பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், ஜூனியர் என்டிஆர், யஷ் , சரத்குமார், அர்ஜுன் ,ராணா மற்றும் நடிகைகள் சுமலதா, ரம்யா, ரக்ஷிதா உட்பட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
யஷ்வந்த்பூர் அருகிலுள்ள தந்தை ராஜ்குமாரின் நினைவிடம் அருகில் புனித் ராஜ்குமாரின் இறுதிச்சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது.