
இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறும் ஜி20 அமைப்பை சேர்ந்த நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பாப்பரசர் பிரான்சிஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.
பாப்பரசர் பிரான்சிஸ், பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு 20 நிமிடங்கள் நடத்த திட்டமிடப்பட்டதாகவும், ஆனால் ஒரு மணி நேரம் நீண்டதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, கொரோனா நிலைமை, அமைதி, பருவநிலை மாற்றம் மற்றும் பொது விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகவும் இதன்போது இந்தியாவிற்கு வர வேண்டும் என போப் பிரான்ஸிஸுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்தாலி தலைநகர் ரோமில் ஜி20 அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இத்தாலி சென்ற பிரதமர் நரேந்திர மோடி உலகப் போர்களின் போது வீரத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
அப்போது உலகப் போரின்போது இத்தாலியில் போர் புரிந்த இந்திய வீரர்களை நினைவை போற்றும் பணியில் ஈடுபட்டுள்ள பிரதிநிதிகளையும் சந்தித்து பேசியுள்ளார்.
அங்கு சீக்கிய சமுதாயம் உள்ளிட்ட பல்வேறு சமூக உறுப்பினர்களுடன் மோடி கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து வத்திக்கான் நகரில் பாப்பரசரை பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.