July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றார் இந்திய பிரதமர் மோடி!

‘ஜி- 20’ உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி சென்றுள்ளார்.

இத்தாலி பிரதமர் மரியோ டிரகியின் அழைப்பை ஏற்று இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

இந்தப் பயணத்தின் போது வத்திக்கானில் போப் பிரான்சிஸையும் அவர் சந்தித்து பேசவுள்ளார்.

இத்தாலி சென்ற இந்திய பிரதமருக்கு ரோம் நகரில் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பளித்துள்ளதுடன், இத்தாலி தலைநகர் ரோம் நகரில் 16 வது ஜி- 20 உச்சி மாநாடு இன்றும் (30) நாளையும் (31) நடைபெறுகிறது.

ரோம் நகர் சென்றடைந்த பிரதமர் மோடியை இத்தாலிக்கான இந்திய தூதர் நீனா மல்ஹோத்ரா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதன்போது ரோம் நகரை சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி தனது பயணம் குறித்து ட்விட்டரில்; ‘ ஜி-20 உச்சி மாநாடானது உலகப் பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கும் முக்கிய மேடையாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருதல், உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, பருவநிலை மாற்றம் ஆகியவை தொடர்பாக இந்த ஜி- 20 உச்சி மநாட்டில் தலைவர்களுடன் விவாதிக்கப்படும் எனவும் ஜி- 20 மாநாடு முடிந்தவுடன் முதல் முறையாக வத்திகான் செல்லும் பிரதமர், அங்கு போப் பாண்டவர் பிரான்ஸிஸை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

ஜி- 20 மாநாட்டுக்கு இடையே இத்தாலி பிரதமர்  உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசவுள்ளதாக பயணம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர், ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு நவம்பர் 1, 2 ஆம் திகதிகளில் நடைபெற உள்ள பருவ நிலை தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதுடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சனையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி  சந்திக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .