July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேரறிவாளனுக்கு பரோல் நீடிப்பு: தமிழக அரசு உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு 6 ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒரு மாத காலம் பரோல் முடிந்து கடந்த ஜூன் மாதம் 28 ஆம் திகதி சிறைக்குத் திரும்ப இருந்த பேரறிவாளனுக்குத் தமிழக அரசு மேலும் ஒரு மாதம் பரோலை நீடித்து உத்தரவிட்டது.

அதேபோல், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஒக்டோபர் எனத் தொடர்ந்து 5 முறை பேரறிவாளனுக்கு பரோல் நீடிக்கப்பட்டது.

இந்நிலையில் அவரது உடல்நிலை கருதி மேலும் ஒரு மாதம் பரோல் நீடிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் சிறுநீரகத் தொற்று, மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்ததைத் தொடர்ந்து, அவருக்கு பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கோரிக்கையை ஏற்று கடந்த மே 28 ஆம் திகதி பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

பரோலில் வந்த பேரறிவாளன் வீட்டிலிருந்தவாறே தனது நோய்களுக்கு சிகிச்சை எடுத்து வந்தார்.

மேலும், மருத்துவ சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று அவர் சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் பேரறிவாளனின் உடல்நிலையைக் கருதி மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கிய தமிழக அரசுக்கு அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவுப்படி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் பேரறிவாளன் தினமும் கையெழுத்திட்டும் வருகிறார்.